பத்தமடை, சேரன்மகாதேவி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்
பத்தமடை பாய், பத்தமடை அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் வளரும் கோரைப் புல்லால் நெய்யப்படுகிறது. கோரைத் தண்டுகளை நுண்ணிய இழைகளாகப் பிளந்து, ஊறவைத்து, சாயமேற்றி, பருத்தி நூல் பாவில் கைத்தறியில் நெய்கின்றனர்; மிக நெருக்கமாக நெய்யப்படும் 'பட்டுப் பாய்' துணி போல மென்மையாக இருப்பதால் மடித்தும் வைக்கலாம். பெரும்பாலும் லப்பை முஸ்லிம் குடும்பங்கள் நெய்யும் இப்பாய்களில், மணமக்களின் பெயரும் திருமணத் தேதியும் நெய்யப்பட்ட திருமணப் பாய்கள் தனிச்சிறப்பு. 'பத்தமடை பாய்' 2013இல் புவிசார் குறியீடாகப் பதிவு செய்யப்பட்டது.